பாலிவுட்

'ஹவுஸ்ஃபுல் 4' படத்தின் வசூல் சர்ச்சை: அக்‌ஷய் குமார் சாடல்

செய்திப்பிரிவு

'ஹவுஸ்ஃபுல் 4' படம் தொடர்பாக உருவான வசூல் சர்ச்சையைத் தொடர்பாக அக்‌ஷய் குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஃபார்ஹத் சாம்ஜி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கீர்த்தி கர்பண்டா, கீர்த்தி சனுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹவுஸ்ஃபுல் 4'. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் நடியாவலா நிறுவனம் இணைந்து தயாரித்து வெளியிட்டது. அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால், தொடர்ச்சியாக வசூலைக் குவித்த ஹவுஸ்ஃபுல் படங்களின் வரிசையில் 4-ம் பாகமாக வெளியானதால், வசூலில் குறை வைக்கவில்லை. இந்தப் படத்தின் வசூல் தொடர்பாக வர்த்தக நிபுணர்கள் பலரும், பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். சிலர் இந்தப் படம் ஒரு தோல்வி படம் என்று கூறவே, சர்ச்சை உண்டானது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர் ரோனி ஸ்குரூவலா தனது ட்விட்டர் பதிவில், "பாக்ஸ் ஆபீஸ் வசூல் கணக்கை அனைவரும் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டிய நேரம் இது. நம்பகத்தன்மையுடன் கூடிய துல்லியமான தகவல்கள் திரைத்துறைக்கு மிகவும் அவசியம். ஈகோக்களை திருப்திப்படுத்துவதற்காக மிகைப்படுத்தப்பட்ட கணக்குகளைத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து எவ்வளவு காலம் ஊக்கப்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

என்னுடைய ட்வீட் எந்த ஒரு படத்தையும் குறிப்பிடவில்லை (அப்படி தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது) என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்கவேண்டும் என்பதற்கான கருத்து அது. அந்த பதிவில் திரைத்துறையைச் சார்ந்த சிலரை டேக் செய்திருந்த காரணம் அவர்களால் நம்பகத்தன்மையில் வித்தியாசத்தை ஏற்படுத்தமுடியும் என்பதற்காகவே" என்று பதிவிட்டார். இந்தப் பதிவு 'ஹவுஸ்ஃபுல் 4' படத்தின் வசூல் சர்ச்சையை மறைமுகமாகவே குறிப்பிட்டுள்ளார்.

தொடர் சர்ச்சையாகி வந்த நிலையில், 'ஹவுஸ்ஃபுல் 4' படத்தின் வசூல் தொடர்பாக அக்‌ஷய் குமார், "லாஸ் ஏஞ்சல்ஸில் இயங்கிவரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் என்ற ஒரு மிகப்பெரிய நிறுவனம், இந்த படத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் நமது மூளையைப் பயன்படுத்த வேண்டும். பல கோடி டாலர்களில் அவர்கள் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு 5 அல்லது 6 கோடி லாபம் எல்லாம் ஒன்றுமே இல்லை.

எனவே அறிவோடு பேசுவோம். அவர்கள் (ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்) தங்களுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதை எழுதினால் அது எல்லா மட்டங்களுக்கும் செல்கிறது, அனைவருக்கும் அவர்கள் தகவல்களைச் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் யாரும் பொய் சொல்லப்போவதில்லை. தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் கணக்குகளை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்று நான் இன்னும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார் அக்‌ஷய் குமார்.

இந்தப் படம் 'ஹவுஸ்ஃபுல் 4' திரைப்படம் வெளியான 8 நாட்களில் 149.36 கோடி வசூல் செய்திருப்பதாக ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT