பாலிவுட்

ரீமேக் வேண்டாம்; நேரடி கதையே பண்ணலாம்: ஷாருக் கானுக்காக அட்லியின் திட்டம்

செய்திப்பிரிவு

எந்தப் படத்தின் ரீமேக்கும் வேண்டாம், நேரடி கதையே பண்ணலாம் என்று கூறி ஷாருக் கானை சம்மதிக்க வைத்துள்ளார் அட்லி.

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'பிகில்' திரைப்படம், உலகளவில் 200 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்து வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஷாருக் கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க அட்லி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. மேலும், இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், எப்படி இந்தக் கூட்டணி சாத்தியமானது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'மெர்சல்' படத்தைப் பார்த்துவிட்டு, இந்த இயக்குநருடன் நாம் படம் பண்ணலாம் என்று முடிவெடுத்துள்ளார் ஷாருக் கான். அப்போதிலிருந்தே இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 'பிகில்' படத்தை முடித்துவிட்டு, படம் பண்ணலாம் என்று பேசியுள்ளனர்.

'பிகில்' படத்தைப் பார்த்துவிட்டு, 'மெர்சல்' அல்லது 'பிகில்' இரண்டில் ஏதேனும் ஒன்றை ஏன் ரீமேக் பண்ணக் கூடாது? என்று பேசியிருக்கிறார் ஷாருக் கான். ஆனால், நேரடி கதையே பண்ணலாம், ரீமேக் எல்லாம் வேண்டாம் என்று ஷாருக் கானை சம்மதிக்க வைத்துள்ளார் அட்லி. அவர் கூறிய ஒரு வரிக்கதையும் ஷாருக் கானுக்குப் பிடித்துவிடவே, அந்தக் கதையைத்தான் படமாகப் பண்ணவுள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பு ஷாருக் கான் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும், படத்தின் பெயர் 'சங்கி' என்றும் வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரித்தபோது, "அது எதுவுமே இன்னும் முடிவாகவில்லை" என்று அட்லி தரப்பு தெரிவித்தது. ஷாருக் கான் படத்தை முடித்துவிட்டு, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். படமொன்றும் இயக்க முடிவு செய்துள்ளார் அட்லி.

'ஜீரோ' படத்தின் படுதோல்விக்குப் பிறகு, எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகாமலிருந்தார் ஷாருக் கான். அதற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT