பயோபிக் எனப்படுகிற பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக மாற்றும் பருவம் பாலிவுட்டில் தழைத்தோங்கி வருகிறது. இதில் இன்னுமொரு பயோபிக்காக, பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
'லால்டென்' (லாந்தர் விளக்கு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் போஜ்பூரி நடிகர் யாஷ்குமார், லாலு பிரசாத் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சின்னம் லாந்தர் விளக்கு. லாலு பிரசாத் யாதவ்வின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் இந்தத் திரைப்படத்தில் சொல்லப்படும் என்று தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி கதாபாத்திரத்தில் ஸ்மிரிதி சின்ஹா நடிக்கவுள்ளார். பிஹார் மற்றும் குஜராத் மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று தெரிகிறது.
பிடிஐ