இதுவரை தான் நடித்ததில் உணர்வுரீதியாக மிகக் கடினமான படம் 'சப்பாக்' என்று தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையே ’சப்பாக்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. மேக்னா குல்சார் இயக்கும் இந்தப் படத்தில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கிறார்.
இந்தப் படம் பற்றிப் பேசிய தீபிகா, " 'பன்சாலி' படத்தில் நடித்ததுதான் உணர்வுரீதியில் கடினமாக இருந்ததாக நினைத்திருந்தேன். ஏனென்றால் அவர் இயக்கத்தில் நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரம், அந்தப் படம் மட்டுமல்ல. அதன் உருவாக்கம் தொடர்பான அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால் நடித்து முடிக்கும்போது பல்வேறு காரணங்களால் சோர்வாகிவிடுவோம்.
’சப்பாக்’கைப் பொறுத்தவரை தயாராகுதலே சோர்வாக இருந்தது. ஒப்பனையே மூன்று மணிநேரங்கள் நடக்கும். அதை நீக்க ஒருமணி நேரம் ஆகும். உணர்வுரீதியாக அப்போது நான் சோர்வாக உணர்ந்த அளவுக்கு எப்போதுமே உணர்ந்ததில்லை.
கடைசி நாளன்று இயக்குநரிடம், ஒப்பனைக்காகப் பயன்படுத்தப்படும் டம்மி முகத்தில் எனக்காக ஒன்று கூடுதலாகக் கேட்டேன். அது கிடைத்தது. கடைசி நாள் படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அதை முடித்து, எனது ஒப்பனையைக் கலைத்து, குளித்துவிட்டு, ஒரு மூலைக்குச் சென்று இந்த டம்மி முகத்தில் என் ப்ராஸ்தடிக் ஒப்பனையை வைத்து சாராயம் ஊற்றி எரித்தேன்.
அது முழுவதும் எரிந்து முடியும் வரை நான் நின்று பார்த்தேன். எல்லாம் சாம்பலாகும் வரை. அது எரிந்து முடிந்த அப்புறம்தான் அந்தக் கதாபாத்திரம் என்னிலிருந்து வெளியே வந்ததாக உணர்ந்தேன். அது முழுவதும் சாத்தியமில்லை. ஏனென்றால் இந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் மனதை விட்டு (மொத்தமாக) என்றும் நீங்குவதில்லை. இப்போதைக்கு நான் செய்த படங்களில் இதுதான் என் கடினமான படம்" என்று தெரிவித்துள்ளார் தீபிகா படுகோன்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 10, 2020 அன்று வெளியாகிறது.