'சூர்யவன்ஷி' படத்துக்காக அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் மற்றும் ரன்வீர் சிங் கலந்துகொள்ளும் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'சிங்கம்' படத்தில் அஜய் தேவ்கன், 'சிம்பா'வில் ரன்வீர் சிங்கைத் தொடர்ந்து தற்போது 'சூர்யவன்ஷி' படத்தில் அக்ஷய்குமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கியமாக இதில் 'சிங்கம்' மற்றும் 'சிம்பா' என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன.
பாலிவுட்டின் மூன்று முன்னணி நட்சத்திரங்களையும் வைத்து பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் படப்பிடிப்பு அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடக்கவுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக இதில் இந்த 3 காவல்துறை அதிகாரிகள் கதாபாத்திரங்களும் தோன்றி சண்டையிடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பிலிருந்து ரன்வீர் சிங், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் இருக்கும் புகைப்படத்தை, தயாரிப்புத் தரப்பு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அக்ஷய் குமார் ஜோடியாக கேத்ரீனா கைஃப் நடித்துள்ளார். முதல் முறையாக அக்ஷய் குமாருடன் ரோஹித் ஷெட்டி இணைந்துள்ளார்.
27 மார்ச் 2020-ல் இந்தப் படம் வெளியாகவுள்ளது. முதன்முறையாக மூன்று பிரபலமான பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவதால், இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.