பாலிவுட்

என் மனக் காயம் ஆறியது: தந்தை குறித்து ப்ரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

'தி ஸ்கை இஸ் பின்க்' படத்தில் நடித்தது தன் தந்தையைப் பற்றிய நினைவுகளுக்கும், தனக்குள் இருந்த எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் ஒரு தீர்வாக இருந்தது என நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஷோனாலி போஸ் இயக்கத்தில் ஃபர்ஹான் அக்தர், ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ள படம் 'தி ஸ்கை இஸ் பிங்'. நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பெற்றோரைப் பற்றிய கதை இது. தன்னம்பிக்கை பேச்சாளர் ஆயிஷா சவுத்ரியின் உண்மைக் கதை இது. ஆயிஷாவின் அம்மா கதாபாத்திரத்தில் ப்ரியங்கா நடிக்கிறார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் ப்ரியங்கா செயல்பட்டுள்ளார்.

இதில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள ப்ரியங்கா, "இந்தப் படம் நடித்துக்கொண்டிருக்கும்போது உளவியல் ரீதியாக எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எனது தந்தையின் இழப்புக்குப் பின் காயமடைந்த என் மனதின் ஒரு பகுதி (இதில் நடித்ததன் மூலம்) ஆற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறேன்.

நான் உணர்ந்த அந்த உணர்ச்சிகளை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இயக்குநர் ஷோனாலியின் வழிகாட்டுதல் படி அதிதி கதாபாத்திரத்தில் நடித்தேன். நம் ஒவ்வொருவருக்கும் இழப்பு மரணம் என்பது இயல்பாக நடக்கக்கூடிய விஷயம் என்பதை புரிந்துகொண்டேன். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பை நினைத்து வருந்துவதை விட, அவர் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டாடவேண்டும் என்பது புரிந்தது. இதுதான் என்னை மாற்றியது.

என்னுள் இன்னு எதிர்மறையான உணர்ச்சிகள் உள்ளன. நான் கோபத்தில் இருந்தேன், காயப்பட்டிருந்தேன், தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். படத்தின் படப்பிடிப்பின் போதுதான் என் திருமணம் நடந்தது. அப்போது என் அம்மா இந்த சந்தர்ப்பத்தில் தனியாக நிற்க வேண்டும், எனது தந்தை என்னுடன் இல்லை என்பதையெல்லாம் நினைத்து வருந்தினேன். இந்தப் படம் எனக்கு ஒரு நிறைவைக் கொடுத்தது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT