ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள படத்தில் தான் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு ஹ்ரித்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
'டங்கல்’, 'ச்சிச்சோர்' படங்களின் இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணத்தைத் திரைப்படமாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக இந்தப் படத்தை உருவாக்கவும் நிதேஷ் திவாரி திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பட அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படம் குறித்து பலவகையான தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்தப் படத்தில் ராமராக ஹ்ரித்திக் ரோஷனும், ராவணனாக பிரபாஸும், சீதையாக தீபிகா படுகோனேவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இந்தப் படத்துக்கான தங்களது எதிர்பார்ப்பை மீம்ஸ்களாகவும், பதிவுகளாகவும் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஹ்ரித்திக் ரோஷன் பேட்டியளித்துள்ளார். அதில் 'ராமாயணம்' திரைப்படம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, ''நான் ராமாயணம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. அந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னிடம் யாரும் பேசவில்லை'' என்று கூறியுள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து நடித்துள்ள ‘வார்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.