பாலிவுட்

ஆஸ்கர் தேர்வில் அதிருப்தி: சூப்பர் டீலக்ஸுக்கு ஆதரவு தரும் பாலிவுட் இயக்குநர்

செய்திப்பிரிவு

'சூப்பர் டீலக்ஸ்' படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்காமல் விட்டதற்கு பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் மட்டுமே மற்ற நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிட முடியும். மேலும் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் படங்களைப் பார்த்து இறுதிப் பட்டியலுக்கு அதை எடுத்துச் செல்லும் இறுதி முடிவு ஆஸ்கர் நடுவர் குழுவிடமே உள்ளது.

இருந்தும் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து எந்தப் படம் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படும் என்பதில் ரசிகர்களிடையே ஆர்வம் நிலவி வருகிறது. 2019 ஆஸ்கர் போட்டிக்கு, இந்தியாவின் பரிந்துரையாக 'கல்லி பாய்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்து, நல்ல விமர்சனங்களையும் பெற்று மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. ஆனால் 'கல்லி பாய்' ஆஸ்கருக்கு உகந்த படமா என்பது குறித்து கடந்த சில நாட்களாகவே இணையத்தில் பல கருத்துகள் உலவுகின்றன. 'அந்தாதுன்', 'ஆர்டிகள் 15', 'உயரே' உள்ளிட்ட படங்களை விட 'கல்லி பாய்' ஆஸ்கருக்கு உகந்த படம் அல்ல என்று சிலர் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 'காண்டே', 'காபில்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா, 'கல்லி பாய்' தேர்வு குறித்து தனது அதிருப்தியை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். சஞ்சய் குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில், "என் பார்வையில் இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமான சூப்பர் டீலக்ஸ் தகுந்த படம் இல்லை போல" என்று பதிவிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு 'சூப்பர் டீலக்ஸ்' நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான போதும், விஜய் சேதுபதியைக் குறிப்பிட்டு படத்தையும் பாராட்டியிருந்தார் சஞ்சய் குப்தா.

இந்த ட்வீட்டில் ஆஸ்கர் தேர்வு குறித்தோ, 'கல்லி பாய்' குறித்தோ சஞ்சய் குப்தா எதையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பதிவிட்டது அந்த விஷயம் குறித்துதான் என பலரும் குப்தாவின் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ரீ ட்வீட் செய்துள்ளனர்.

தமிழிலிருந்து 'வட சென்னை', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஆகிய படங்கள் ஆஸ்கர் தேர்வுக்குப் பரிசீலனையில் இருந்தன என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT