பாலிவுட்

'கலங்' படுதோல்வி: தயாரிப்பாளர் கரண் ஜோஹர் விளக்கம்

செய்திப்பிரிவு

'கலங்' படத்தின் படுதோல்வி குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோஹர் விளக்கம் அளித்துள்ளார்.

அபிஷேக் வர்மன் இயக்கத்தில் சஞ்சய் தத், ஆதித்யா ராய் கபூர், வருண் தவான், மாதுரி தீட்சித், சோனாக்‌ஷி சின்ஹா, ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கலங்'. கரண் ஜோஹர், சாஜித் நாடியாவாலா, ஹைரோ யாஷ் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இணைந்து தயாரித்தார்கள்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஏப்ரல் 17-ம் தேதி வெளியான இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. பெரும் பொருட்செலவில் உருவான படம் என்பதால், அனைத்து தயாரிப்பாளர்களுக்குமே நஷ்டம் ஏற்பட்டது.

முதல் முறையாக இந்தப் படத்தின் தோல்வி குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர், "சர்வதேச அளவில் மிகப்பெரிய தோல்வியடைந்த (கலங்) ஒரு படத்தை இப்போதுதான் நாங்கள் வெளியிட்டோம். திரைப்படங்களில் கதாசிரியர்கள் தான் இன்று மிக வலிமையானவர்கள். அவர்களை அங்கீகரிக்கும் ஒரு துறையில் நாங்கள் இருக்கிறோம்.

ரசிகர்களுக்கு வலுவான படத்தைக் கொடுத்தால் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். எங்கள் படம் தோல்வியடைந்திருக்கிறது என்றால் ரசிகர்களுக்குத் தவறான ஏதோ ஒன்றை நாங்கள் கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் கரண் ஜோஹர்.

தனது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள 'டக்கத்' படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கரண் ஜோஹர். ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஆலியா பட், விக்கி கவுசல், ஜான்வி கபூர், அனில் கபூர் என பெரிய நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT