'கோமாளி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் அர்ஜூன் கபூர் நடிக்க உள்ளார். அத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'கோமாளி'. இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
விபத்து ஒன்றில் சிக்கி, 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஒருவர் சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கரு. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் தயாரிப்பளருமான போனி கபூர் வாங்கியுள்ளார். இந்தப் படத்தில், போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நாயகனாக நடிக்க உள்ளார்.
இதுதொடர்பாக, போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'கோமாளி' திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றதில் மகிழ்ச்சி. இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர் நடிக்க உள்ளார்," எனத் தெரிவித்துள்ளார்.
போனி கபூர் தற்போது அஜய் தேவ்கன் நடிக்க, அமித் ஷர்மா இயக்கும் 'மைதான்’ திரைப்படத்தைத் தயாரிக்கிறார். மேலும், இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'பதாய் ஹோ' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.