கணித மேதை சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாறை சொல்லும் 'சகுந்தலா தேவி - ஹ்யூமன் கம்ப்யூட்டர்' இந்தி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.
பாலிவுட்டில் பயோபிக் படங்கள் அரிதில்லை என்றாலும் கடந்த சில வருடங்களாகவே இந்த வகைப் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மேலும் கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றுள்ளன.
ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையையொட்டி எடுக்கப்பட்ட 'டர்டி பிக்சர்' என்ற படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றது. கடந்த மாதம், இஸ்ரோவின் மங்கள்யான் பற்றிய 'மிஷன் மங்கள்' படத்திலும் வித்யாபாலன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 200 கோடி ரூபாயை கடந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.
தற்போது, மனித கணினி என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவியின் பயோபிக்கில் தலைமை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வித்யாபாலன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதையொட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அனு மேனன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
முன்னதாக ஒரு பேட்டியில், "தனது தனித்தன்மையை போற்றி, வலுவான பெண்ணியக் குரலாக இருந்து, சுற்றியிருப்பவர்களின் விமர்சனங்களைத் தாண்டி ஜெயித்தவர் சகுந்தலாதேவி. அவர் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன். வழக்கமாக கணிதத்தோடு ஒரு சந்தோஷமான / உற்சாகமான நபரை தொடர்புப்படுத்திப் பார்க்க மாட்டோம். ஆனால் சகுந்தலாதேவி அந்த எண்ணத்தையே அடியோடு மாற்றுகிறவர்" என்று வித்யாபாலன் கூறியுள்ளார்.