பாலிவுட்

'பிரித்விராஜ்' வரலாற்றுக் காவியத்தில் அக்‌ஷய் குமார்: 2020 தீபாவளியில் ரிலீஸ்

செய்திப்பிரிவு

அக்‌ஷய் குமாரின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தனது முதன்முதல் வரலாற்றுத் திரைப்படத் தயாரிப்பை யாஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இப்படத்துக்கு 'பிரித்விராஜ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இரக்கமே இல்லாத கோரி முகமதுவுக்கு எதிராக அச்சமில்லாமல் தைரியமாக எதிர்த்துப் போரிட்ட வீர மன்னன் என்று வரலாற்று ஆசிரியர்களும், நாட்டுப்புற செவிவழிக் கதைகளும் பிரித்விராஜைச் சித்தரிக்கின்றன. கோரி முகமதுவுக்கு எதிராக நம்பமுடியாத தைரியமும், அசாத்தியமான வீர விளையாட்டுகளும், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்தியாவின் பிரபலமான போராளியாகவும், மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற மன்னனாகவும் பிரித்விராஜை வரலாற்றில் இடம்பெறச் செய்துள்ளன.

அச்சம் என்பதையே அறியாத மாபெரும் வீர அரசனான பிரித்விராஜ் சௌஹானின் வாழ்க்கை மற்றும் அவரது வீரதீர பண்பியல்புகள் அடிப்படையில் 'பிரித்விராஜ்' படம் உருவாகிறது. இதில் பிரித்வியாக அக்‌ஷய் குமார் நடிக்கிறார். அவரின் 52-வது பிறந்த நாளான இன்று இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்‌ஷய் குமார் கூறுகையில், ''இந்திய வரலாற்றில் அச்சமில்லாத, அசாத்திய தைரியமுள்ள மன்னர்களுள் ஒருவரான பிரித்விராஜ் சௌஹானின் கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்திருப்பது உண்மையிலேயே ஒரு மாபெரும் கௌரவமாகும். ஒரு தேசமாக நமது ஹீரோக்களை நாம் எப்போதும் கொண்டாடி, அவர்களது புகழை என்றும் நிலைக்கச் செய்யவேண்டும். இந்தியர்கள் எந்த மதிப்பீடுகளைச் சார்ந்து வாழ்ந்தார்களோ, அதை நிலைநிறுத்தவும் இந்த மாபெரும் வீரர்கள் செய்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி, அவர்களது புகழை நிலைக்கச் செய்ய வேண்டும். எனது பிறந்த நாளன்று இத்திரைப்படத் தயாரிப்பின் அறிவிப்பு வெளிவந்திருப்பது இதை இன்னும் அதிக சிறப்பானதாக எனக்கு ஆக்கியிருக்கிறது'' என்று கூறினார்.

அரசியல் உத்திகளை வகுப்பதில் நிகரற்ற நிபுணராக, இந்தியாவின் வரலாற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சாணக்கியா என்ற வரலாற்றுப் பிதாமகன் குறித்து தொலைக்காட்சித் தொடரை இயக்கிய டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி 'பிரித்விராஜ்' படத்தை இயக்குகிறார். 2020 ஆம் ஆண்டு, தீபாவளித் திருவிழாவையொட்டி இப்படம் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT