பாலிவுட்

''ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அதை நானே சொல்வேன்'' - வதந்திகளுக்கு ஷாரூக் பதில்

செய்திப்பிரிவு

நான் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அதை நானே சொல்வேன் என்று பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் கூறியுள்ளார்.

ஷாரூக் கான், அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ஜீரோ’. ஆனந்த எல் ராய் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியைத் தழுவியது. இதுவரை இல்லாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படு சொதப்பலான திரைக்கதையைக் கொண்டிருந்ததால் படம் நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளானது.

அதன் பிறகு தனது அடுத்த படம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் ஷாரூக் கான் அமைதி காத்து வந்தார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது இயக்குநர் அட்லீயும் ஷாரூக் கானும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். இதனால் அட்லீயின் அடுத்த படத்தில் ஷாரூக் நடிப்பதாகவும், ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அதற்கான வேலைகள் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலுக்கு ஷாரூக் மற்றும் அட்லீ தரப்பிலிருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

கடந்த சில நாட்களாக ‘சுல்தான்’ , 'பாரத்’ ஆகிய பாலிவுட் படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப் 8) பதிலளித்துள்ளார்.

“நான் இல்லாத நேரங்களிலும், என் பின்னாலும் எனக்கே தெரியாத பல படங்களில் நான் ஒப்பந்தமாகியிருப்பதைப் பற்றி தெரிந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆண்களே.. பெண்களே.. நான் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அதை நானே சொல்வேன். அதைத் தவிர மற்ற எதுவும் உண்மையில்லை” என்று ஷாரூக் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT