பாலிவுட்

தள்ளிப்போகும் இன்ஷால்லா; வேறு படத்துடன் சந்திக்கிறேன்: சல்மான் கான் உறுதி

செய்திப்பிரிவு

சல்மான் கான் - சஞ்சய் லீலா பன்சாலி இணையின் 'இன்ஷால்லா' திரைப்படம் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் படம் வெளியாகவிருந்த ஈகைத் திருநாளில் தனது இன்னொரு படம் வெளியாகும் என சல்மான் கான் உறுதியளித்துள்ளார்.

'பத்மாவத்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட திரைப்படம் இன்ஷால்லா. 'ஹம் தில் தே சுக்கே ஸனம்' படத்துக்குப் பிறகு பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஜோடியாக அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்தப் படம் 2020 ஈகைத் திருநாள் அன்று வெளியாகவிருந்தது. சல்மான் கானின் பல படங்கள் ஈகைத் திருநாள் அன்று வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தவை. ஆனால் தற்போது இன்ஷால்லா, சொன்ன தேதிக்கு வெளியாகாது என்று சல்மானே அறிவித்துள்ளார்.

"சஞ்சய் லீலா பன்சாலி உடனனான திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் உங்கள் அனைவரையும் 2020 ஈகைத் திருநாளில் சந்திப்பேன். இன்ஷா அல்லா" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சல்மான்.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 'தபாங் 3' வெளியாகவுள்ளது. 'ஏக் தா டைகர்' படத்தின் மூன்றாவது பாகத்திலும் சல்மான் நடிக்கவுள்ளார். மேலும் சூரஜ் பர்ஜாத்யா படத்திலும் சல்மான் நடிக்கவுள்ளார். இதோடு 'கிக்' படத்தின் இரண்டாம் பாகமும், 'வெடரன்' என்கிற தென் கொரிய திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் சல்மானே நாயகன்.

இதில் எந்தப் படம் 'இன்ஷால்லா' தேதியில் வெளியாகும் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT