ரங்கோலி பதிவேற்றிய படம் 
பாலிவுட்

600ரூபாய் புடவை, 2 லட்ச ரூபாய் கைப்பைய்யா? கங்கணாவை கலாய்த்த நெட்டிசன்கள்

செய்திப்பிரிவு

கங்கணா நல்ல காரியம் செய்துள்ளார் என்று அவரது சகோதரி விளம்பரப்படுத்த நினைக்க அது கலாய்ப்பில் முடிந்துள்ளது.

நடிகை கங்கணா ரணவத் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சர்ச்சைக்குரிய நட்சத்திரமும் கூட. குறிப்பாக இவரது சகோதரி ரங்கோலி சாந்தேல், அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது தங்கைக்கு ஆதரவாகப் பேச பல்வேறுப் பிரபலங்களை வம்புக்கிழுப்பதும், அவர்கள் பற்றி அவதூறு பரப்புவதும் வழக்கம்.

சமீபத்தில் ரங்கோலி, கங்கணா ஒரு பருத்தி சேலையை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதனுடன், "இன்று ஜெய்ப்பூர் செல்லும் கங்கணா 600 ரூபாய் மதிப்பிலான, கொல்கத்தாவில் வாங்கிய புடவையை அணிந்துள்ளார். இவ்வளவு நல்ல தரமான பருத்தி சேலை இந்த விலைக்குக் கிடைக்கும் என்பதைக் கேட்டு அவர் ஆச்சரியமடைந்தார். மேலும் நம் நாட்டு மக்கள் எவ்வளவு கடினமாக உழைத்து எவ்வளவு குறைவாக சம்பாதிக்கின்றனர் என்பது மன வருத்தமடையச் செய்கிறது. சர்வதேச நிறுவனங்கள் கடத்திப் போகும் முன் நமது இந்திய நெசவாளர்களைஆதரியுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சிலர் கங்கணாவின் எளிமையான புடவையை பாராட்டினாலும் அந்தப் புகைப்படத்தில் கங்கணா கையில் வைத்திருந்த கைப்பை அவரை நெட்டிசன்களிடம் மாட்டவைத்து விட்டது.

''600 ரூபாய் புடவையுடன் ஏன் 2 லட்ச ரூபாய் பை? அப்பட்டமான பாசாங்கு'' என்று ஒருவர் கூற, இன்னொருவரோ, ''2-3 லட்சம் மதிப்பிலான கைப்பையும், 1-2 லட்சம் மதிப்பிலான காலணி, கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு நீங்கள் செய்யும் இந்த பிரச்சாரம் அற்புதம். போலியாக இருப்பதற்கும் ஒரு எல்லை உண்டு'' என்று கலாய்த்திருந்தார்.

தொடர்ந்து பலரும் பையின் விலை, அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை, ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான செலவு என அடுத்தடுத்து பட்டியலிட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். எப்போதும் எல்லாவற்றுக்கும் வரிந்துகட்டிக் கொண்டு பதில் சொல்லும் ரங்கோலி இந்த கலாய்ப்புகளுக்கு அமைதி காத்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT