தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்
தற்போது லண்டனில் 83 உலகக்கோப்பை வெற்றி பற்றிய பயோபிக்கில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். இதில் கபில்தேவ் மனைவி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடிக்கிறார்.
லண்டன் சர்ரே பகுதியில் வசித்து வரும் கிரண் நடிகர் ரன்வீர் சிங்கின் ரசிகை. ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் ரன்வீர் சிங் ரசிகர் பக்கத்தின் நீண்ட நாள் உறுப்பினரும் கூட. ரன்வீர் சிங் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரின் பரம ரசிகை. ரன்வீர் லண்டன் வந்த ஒவ்வொரு முறையும் கிரண் அவரை சந்தித்துப் பேசியுள்ளார். இம்முறை ரன்வீர் கிரணை தானே சென்று பார்த்துள்ளார். கிரண் கர்ப்பமாக இருந்த காரணத்தால், அவரை சென்று பார்த்து நலம் விசாரித்து சந்தோஷப்படுத்தும் நோக்கில் ரன்வீர் இதைச் செய்துள்ளார்
படப்பிடிப்பு முடிந்ததும் சர்ரேவில் இருக்கும் கிரணை சென்று சந்தித்துள்ளார் ரன்வீர். 45 நிமிடம் காரில் பயணம் செய்து கிரண் வீட்டு வாசலுக்குச் சென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கிரண் வீட்டில் அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் உரையாடி, வாழ்த்திவிட்டு வந்திருக்கிறார் ரன்வீர்.
தொடர்ந்து கிரண் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் சந்தோஷத்தில் நிஜமாகவே குதித்து வீட்டு சமையலறைக்குள் சென்று ஒளிந்து கொண்டேன். எனது கணவர் கதவைத் திறந்தார். நான் எங்கே என்று ரன்வீர் கேட்டது எனக்குக் கேட்டது. நான் சமையலறையில் ஒளிந்து கொண்டிருப்பதாக என் கணவர் சொன்னார்.
அங்கு வந்த ரன்வீரைப் பார்த்து என்னால் நம்பமுடியவில்லை. நான் உறைந்துவிட்டேன். மகிழ்ச்சியில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. எனக்கு வாழ்த்துக்கள் சொன்னார். என்னுடனும், என் கணவருடனும் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடிவிட்டு, வாழ்த்திவிட்டுச் சென்றார். ஏதோ பிரிந்து சென்ற பழைய நண்பரைப் பார்ப்பது போல அவ்வளவு இயல்பாக உணரவைத்தார். எங்கள் திருமண புகைப்படங்கள், எனது குழந்தைப் பரிசோதனை படங்கள் ஆகியவற்றைப் பார்த்தார்.
அவரது தற்போதைய படம், அடுத்த படம் பற்றிப் பேசினார். சில புகைப்படங்கள், வீடியோக்களை காட்டினார். ஆச்சரியமடைந்துவிட்டேன். சிறப்பாக நேரம் கழிந்தது. இன்னும் கூட என்னால் அவர் செய்த காரியத்தை நம்ப முடியவில்லை" என்று அடுத்தடுத்து ட்வீட்டுகளை பதிவேற்றியுள்ளார்.