நெல்லையில் திருடர்களுடன் துணிந்து போராடி அவர்களை விரட்டி அடித்த முதியவர்களுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மனைவி செந்தாமரை (65). இவர்கள், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுடைய பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, சண்முகவேல், செந்தாமரை ஆகியோர் மட்டும் அங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) வீட்டின் போர்டிகோ பகுதியில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு 2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர்.
இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்டு அவர்களை நாற்காலியைக் கொண்டு இரு முதியவர்களும் விரட்டி அடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அனைவராலும் பகிரப்பட்டது.
மேலும் திருடர்களை விரட்டியடித்த முதியவர்களுக்குப் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெல்லை முதியவர்ளைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ''ப்ராவோ'' ( சிறந்த செயல்) என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.