பாலிவுட்

'அவதார்' தலைப்பே நான் சொன்னதுதான்: பாலிவுட் நடிகர் கோவிந்தா அதிரடி

செய்திப்பிரிவு

தனக்கு அவதார் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவதார். சர்வதேச அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் சாதனையையும் படைத்தது. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தற்போது மொத்தமாக படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கோவிந்தா பேசியதாவது, “என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது. அவ்வளவு நாட்கள் உடம்பில் வண்ணம் பூசி என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். நான் தான் கேமரூனுக்கு அவதார் என்ற தலைப்பே கொடுத்தேன். படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் இந்தப் படத்தை முடிக்க உங்களுக்கு 7-8 வருடங்களாவது ஆகும் என்றேன். அவர் கோபப்பட்டார். 

அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான், உங்கள் பார்வை சாத்தியமற்றது போல தெரிகிறது என்றேன். நான் நினைத்தது போலவே படம் 7 வருடங்கள் கழித்து வந்தது. பெரிய வெற்றி பெற்றது" என்று தெரிவித்துள்ளார்

கோவிந்தாவின் இந்த பேட்டி நெட்டிசன்களை உசுப்பேற்றியுள்ளது. அவரைக் கலாய்த்து எண்ணற்ற மீம்களும், நகைச்சுவைகளும் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் கோவிந்தாவை, அவதார் தோற்றத்தில் மாற்றி புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன. 

SCROLL FOR NEXT