பாலிவுட்

'சூப்பர் 30' சிறப்பு: குடியரசு துணைத் தலைவர் பாராட்டு

செய்திப்பிரிவு

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, 'சூப்பர் 30' படத்தைப் பாராட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சூப்பர் 30' திரைப்படம், ஆனந்த் குமார் என்ற கணிதப் பேராசியரின் உண்மைக் கதை. ஒவ்வொரு வருடம் ஐஐடி தேர்வுக்காக, பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு அவர் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார். 

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் இதுவரை 63.75 கோடி ரூபாயை வசூலித்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்தப் படத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு திரையிட்டுள்ளது படக்குழு. படத்தைப் பார்த்து அவர் பாராட்டு மழை பொழிந்துள்ளார். 

"சூப்பர் 30 படத்தை, அதன் நாயகன் ஹ்ரித்திக் ரோஷன், தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா, ஆனந்த்குமார் மற்றும் என் குடும்பத்தினருடன் பார்த்ததில் மகிழ்ச்சி. வறுமையில் வாடும் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்துகாக, அனைத்துத் தடைகளையும் தாண்டி போராடிய பேராசிரியர் ஆனந்தின் உத்வேகம் தரும் கதை என்னைக் கலங்க வைத்துள்ளது. 

பல நூறு புத்திசாலித்தனமான மாணவர்களின் கனவுகளை நனவாக்க, ஓய்வின்றி உழைத்த ஆசிரியரின் அர்ப்பணிப்பு, வைராக்கியம் ஆகியவற்றைத் திரையில் கொண்டு வந்த தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள். படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் நடிப்பும் என்னைக் கவர்ந்தன. 

'சூப்பர் 30' பயிற்சி மையத்தை நடத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் திறமைகளைப் பயிற்சி தந்து மெருகேற்றிய ஆனந்தின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்" என்று வெங்கய்ய நாயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹ்ரித்திக் ரோஷனும் வெங்கய்ய நாயுடுவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT