மகள், கணவருடன் ஸ்ரீதேவி | கோப்புப் படம்: பிடிஐ 
பாலிவுட்

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம்: கேரள டிஜிபி உருவாக்கும் பரபரப்பு 

செய்திப்பிரிவு

கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் என்பவர், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று எழுதியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கடந்த வருடம் பிப்ரவரி மாதம், துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டலில், பாத் டப்பில் மயங்கி விழுந்து மூழ்கி இறந்து போனார். அன்றிலிருந்தே அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்களும், புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் போலீஸார், மது போதையில் எதிர்பாராத விதமாக மூழ்கியதால் நேரிட்ட இயற்கை மரணம் தான் என்று அறிக்கை தந்தனர். 

தற்போது, கேரள சிறைத்துறையைச் சேர்ந்த டிஜிபி ரிஷிராஜ் சிங் என்பவர், ஒரு தினசரியில் எழுதியுள்ள கட்டுரையில், "நான் ஸ்ரீதேவியின் மரணம் பற்றி ஆர்வத்துடன் கேட்டபோது, எனது நண்பரும், மறைந்த தடயவியல் நிபுணருமான டாக்டர் உமாடதன், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானதல்ல, கொலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அவரது கணிப்பை உறுதி செய்ய சில தகவல்களைச் சொன்னார். அவரைப் பொறுத்தவரை, ஒருவர் எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்கி இறக்க முடியாது. யாராவது அவரது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு தலையை தண்ணீரில் முக்கினால் மட்டுமே மூழ்கி இறக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போனீ கபூர், "இது போன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அவசியமுமில்லை. ஏனென்றால் இது போன்ற கதைகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கும். அடிப்படையில் இது ஒருவரது கற்பனை மட்டுமே" என்று கூறியுள்ளார். 

SCROLL FOR NEXT