பிரபல பாலிவுட் நடிகரும் திரைப் படத் தயாரிப்பாளருமான சசி கபூருக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கவுரவித்தார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் கடந்த 3-ம் தேதி நடந்தது. திரைப்படத் துறையில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு, பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், 77 வயதாகும் சசி கபூர், உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்யவில்லை. இதையடுத்து, மும்பையில் உள்ள பிருத்வி தியேட் டரில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை உறவினரான நடிகர் ரிஷி கபூர் செய்திருந்தார்.
அதன்படி, பாலிவுட்டில் வெற்றி கரமான நடிகராக புகழ்பெற்ற சசி கபூருக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கவுரவித்தார். உடல்நலக் குறைவு காரணமாக நடக்க இயலாத நிலையில், சக்கர நாற்காலியில் வந்து விருதைப் பெற்றுக் கொண்டார் சசி கபூர். அவருக்கு ஜேட்லி சால்வை அணிவித்து சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கியபோது, கைகளைக் கட்டியபடி புன்சிரிப்புடன் சசி கபூர் ஏற்றுக் கொண்டார்.
விருது வழங்கி ஜேட்லி பேசும் போது, ‘‘சிறந்த நடிகர், தயாரிப் பாளர், இயக்குநர் என்று பல்துறை வித்தகராகத் திகழ்பவர் சசி கபூர். இவர் தனது தந்தை பிருத்விராஜ் கபூர் நினைவாக கட்டிய இந்தப் பிருத்வி தியேட்டரிலேயே நாங்கள் விருது வழங்கியது பொருத்தமாக உள்ளது. சசி கபூர் பூரண நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்’’ என்றார்.
நிகழ்ச்சியில், சசி கபூர் குழந்தை நட்சத்திரமாக இருந்து மிகப் பெரிய நடிகராக உருவானது குறித்த ஒலி, ஒளி காட்சிகள் காட்டப்பட்டன.
பிருத்விராஜ் கபூரின் 3 மகன் களில் இளையவர் சசி கபூர். ராஜ் கபூர், ஷம்மி கபூர் ஆகியோர் மூத்த வர்கள். கபூர் குடும்பத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் 3-வது நபர் சசி கபூர் என்பது குறிப் பிடத்தக்கது.
இவருக்கு முன்னர் பிருத்விராஜ், ராஜ் கபூர் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். மேலும் இந்திய சினிமாவில அளப்பரிய பங்காற்றியமைக்காக தாதா சாகேப் பால்கே விருது பெறும் 46-வது நபர் சசி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.