பாலிவுட்

திரைப்படமாகும் வீரப்பன் என்கவுன்ட்டர்: ராம் கோபால் வர்மா இயக்குகிறார்

செய்திப்பிரிவு

சந்தன மரக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக திரைப்படம் எடுக்க இயக்குநர் ராம் கோபால் வர்மா திட்டமிட்டுள்ளார். இப்படத்துக்கு ‘கில்லிங் வீரப்பன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. இவர் ஏற்கெனவே மும்பை தாதா உலகம், மும்பை தாக்குதல் சம்பவம் என்று உண்மைச் சம்பவங்களை அடிப்படை யாகக் கொண்டு பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக சந்தன மரக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பான திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கு ‘கில்லிங் வீரப்பன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். வீரப்பன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி குறிப்பிட்டுள்ள ராம் கோபால் வர்மா “வீரப்பனின் கதை எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதை படமாக எடுக்க நான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். இப்போதுதான் அதற்கு சரியான திரைக்கதை கிடைத்துள்ளது. இந்தப் படம் வீரப்பனின் தனிப்பட்ட கதையை காட்டாது. மாறாக வீரப்பனை கொலை செய்தவரைப் பற்றிய படமாக இது இருக்கும். வீரப்பனைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் ஆராய்ச்சி செய்து புதிய கோணத்தில் இப்படத்தை எடுக்கிறேன். ஷிவ் ராஜ்குமாரை இதில் நடிக்க வைக்க ஒரு காரணம் உள்ளது. ஷிவ் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றார். தற்போது ஷிவ் ராஜ்குமாருக்கு வீரப்பனை பழிவாங்க திரையில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

பின் லேடனைவிட அபாயகரமான ஆள் என்று வீரப்பனை வர்ணித்துள்ள ராம் கோபால் வர்மா, “ ஒசாமாவுக்கு சர்வ தேச அளவில் தொடர்புகள் இருந்திருக்க லாம். ஆனால், அவர் வீரப்பனைவிட அபாயகரமானவர் அல்ல” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT