பாலிவுட்

விராட் கோலியின் ஆட்டத்துக்கு அனுஷ்கா மீது பழி சுமத்துவது நியாயமில்லை: வித்யா பாலன் ஆவேசம்

செய்திப்பிரிவு

விராட் கோலியின் ஆட்டத்துக்கு அனுஷ்கா ஷர்மா மீது ரசிகர்கள் பழி சுமத்துவது நியாயமில்லை என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அவரது காதலியான நடிகை அனுஷ்கா ஷர்மா, இப்போட்டியை காணவந்ததே இதற்கு காரணம் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது. இதற்காக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஜஸ்ட் பார் விமன்’ என்ற இதழ் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக நடிகை வித்யா பாலன் நேற்று சென்னை வந்திருந்தார். அப்போது அனுஷ்கா விவகாரம் குறித்து வித்யா பாலன் கூறியதாவது:

விளையாட்டில் ஒரு வீரர் ஒரு நாள் சதம் அடிக்கலாம்; ஒரு நாள் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகலாம். அவரது விளையாட்டையும் ஒரு நபர் உடன் வருவதையும் தொடர்புபடுத்துவது அபத்தமானது. கோலியின் விளையாட்டுக்கு அனுஷ்கா ஷர்மா மீது பழி சுமத்துவது நியாயமில்லை.

பெண்கள் என்றாலே அவர்களின் உடலமைப்பு மீதுதான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நான் குண்டாகியிருக்கிறேனா இல்லையா என்றெல்லாம் ஊடகத்தில் பேசப்படுகிறது. ஆனால், பெண்கள் பல இந்த தடைகளை எல்லாம் தாண்டி புதிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

‘ஜஸ்ட் பார் விமன்’ என்ற இதழ் பெண்களின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஆண்டுதோறும் கருத்தரங்கம் நடத்துகிறது. இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பெண்களின் உடலமைப்புகள் குறித்த பிரச்னைகள், பெண்கள் வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலையை எப்படி சமாளிப்பது என்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. இதில் நடிகை வித்யா பாலன், ஸ்ரீராம் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் அகிலா ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT