இந்தி நடிகர் சல்மான்கான் தனது ஓட்டுநர் உரிமத்தைத் சமர்ப்பிக்க, மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார் சல்மான் கான். மான்களை வேட்டையாடினார், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தார் என்று சல்மான் கான் மீது வழக்குகள் உள்ளன.இப்போது சல்மான் கான் மீது தொடரப்பட்ட இன்னொரு வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.
மும்பையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தி நடிகர் சல்மானின் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். நான்குபேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை மும்பை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்தமனுவில், விபத்தை ஏற்படுத்தியபோது சல்மான்கானிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. 2004 ஆம் ஆண்டில்தான் சல்மான் கான் ஓட்டுநர் உரிமம் பெற்றார் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். இறுதியில் சல்மான் கான் ஓட்டுநர் உரிமத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.