சர்வதேச அளவில் பலரது கவனத்தையும், பாராட்டையும் ஈர்த்த 'தி லன்ச்பாக்ஸ்' இந்தித் திரைப்படம், பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் பாஃப்டா (Bafta) விருதுகளுக்கு, சிறந்த வேற்று மொழித் திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இர்ஃபான் கான், நிம்ரத் கவுர் ஆகியோர் நடித்திருக்க, ரிதேஷ் பாத்ரா இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான காதல் கதையாக எடுக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் முதலில் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்ட பிறகே இந்தியாவில் வெளியானது. 2013-ஆம் ஆண்டே இத்திரைப்படம் இந்தியாவில் வெளியாகியிருந்தாலும், 2014-ம் வருடம் தான் பிரிட்டைனில் வெளியானது.
இந்த பரிந்துரை குறித்து பேசிய இயக்குநர் ரிதேஷ், "இந்தப் புதுவருடத்தை துவங்க அற்புதமான வழி இது. ஆண்டின் சிறந்த படங்களோடு எங்கள் திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்" என்றார்.
இதே பிரிவில், போலிஷ் மொழிப் படமான, 'இடா', ரஷ்யப் படம் 'லெவியத்தான்', பிரேசிலைச் சேர்ந்த 'ட்ராஷ்', பெல்ஜியத்தின் 'டூ டேஸ், ஒன் நைட்' ஆகிய திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.