ரன்வீர் சிங் பிறந்த நாளை முன்னிட்டு, ’83’ படத்தில் அவர் ஏற்றுள்ள கபில்தேவ் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
1983-ல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்ற கதையைச் சொல்லும் ‘83' திரைப்படத்தில் ரன்வீர் சிங், இந்திய அணியின் அன்றைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரன்வீரின் மனைவி தீபிகா படுகோன், திரைப்படத்தில் கபில் தேவின் மனைவியான ரோமி தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘83’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில் கூட ரன்வீர் சிங் கலந்து கொண்டு, ரசிகர்களை மகிழ்வித்தார். இன்று (ஜுலை 6) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.
இதனை முன்னிட்டு, '83' படத்தில் அவர் ஏற்றுள்ள கபில்தேவ் கதாபாத்திரத்தில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தாகிர் ராஜ் பாசின், அமிர்தா புரி, ஜீவா, அம்மி வீர்க், சாஹில் கட்டார், சிராக் பாட்டீல் உள்ளிட்ட பலர் ரன்வீர் சிங் நடித்து வருகிறார்கள். கபீர் கான் இயக்கி வரும் இந்தப் படத்தை விபிரீ மீடியா, ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. 2020, ஏப்ரல் 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.