கங்கணா ரணாவத் நடித்து வெளியாகவுள்ள ‘மெண்டல் ஹாய் க்யா’ படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளது. இதை கங்கணாவே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏக்தா கபூர் தயாரிப்பில் ராஜ்குமார் ராவ் மற்றும் கங்கணா இணைந்து நடித்திருக்கும் படம் ‘மெண்டல் ஹாய் க்யா’. பிரகாஷ் ராவ் கோவேலமுடி படத்தை இயக்கியுள்ளார். படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தணிக்கை சமீபத்தில் நடந்தது. படத்தில் எந்தவிதமான வெட்டும் இல்லாமல் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தலைப்பு மட்டும் மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து கங்கணா, “படத்தின் தலைப்பில் சிறிய மாற்றம் இருக்கும். ஏனென்றால், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தலைப்பு சற்றுக் கடுமையாக இருப்பதாகக் கருதுகின்றனர். மற்றபடி நாங்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால், படத்தில் வேறெதுவும் நீக்கப்படவில்லை. அவர்கள் படத்தை ஆர்வத்துடன் பார்த்தனர்” என்று கூறியுள்ளார்.
விரைவில் படத்தின் புதிய தலைப்பை தயாரிப்பு தரப்பு வெளியிடும் என்று தெரிகிறது.
முன்னதாக, படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறி இந்தியன் சைக்காட்ரிக் சொசைட்டியின் உறுப்பினர்கள் தணிக்கைத்துறைக்குக் கடிதம் எழுதினர். படம், மனநலப் பராமரிப்புச் சட்டம் 2017-ல் பல பிரிவுகளை மீறியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
தயாரிப்பாளர் ஏக்தா கபூர், “இந்தப் படம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டிப்பாகத் தவறாகச் சித்தரிக்கவில்லை. யார் உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. மனநலப் பாதிப்பை ஒழுங்காக அணுகியிருக்கிறோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.