பாலிவுட்

சென்சார் துறை தலைவராக ஜோஷியின் நியமனம் நல்ல அறிகுறி: இயக்குநர் மதுர் பண்டார்கர்

பிடிஐ

மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை தலைவராக, ப்ரஸூன் ஜோஷி நியமிக்கப்பட்டது நல்ல அறிகுறி என்றும். அவர் விரும்பத்தகுந்த மாற்றங்களைக் கொண்டு வருவார் என்றும் பாலிவுட் இயக்குநர் மதுர் பண்டார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி அவர் பேசுகையில், "ப்ரஸூன் பண்பட்ட ஆளுமை கொண்டவர். சிறந்த விளம்பர உலகப் பின்னணியிலிருந்து வந்தவர். முக்கியமாக, இந்த நாட்டின் இளைஞர்களை நன்றாக புரிந்திருப்பவர். அவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சினிமா துறைக்கு நல்லது. அதனால்தான் மொத்த துறையும் இதை வரவேற்றுள்ளது" என்றார்.

கடந்த மாதம் பண்டார்கரின் 'இந்து சர்கார்' திரைப்படம் சென்சாரில் பிரச்சினைகளை சந்தித்த பிறகே வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படத்தின் வரவேற்பில் தனக்கு மகிழ்ச்சியே என பண்டார்கர் கூறியுள்ளார்.

"நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். படம் வெளியாகி 4 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் பெரிய பட்ஜெட் படங்களோடு என் படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இது அடுத்த தலைமுறைக்கான படம். இந்திய வரலாற்றில் முக்கியமான பகுதியைப் பேசும் படம்" என மதுர் பண்டார்கர் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT