மீண்டும் கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் நடிகர் அமிதாப் பச்சன், அந்த நிகழ்ச்சிக்கு அதிகபட்ச கவனம் தேவை எனக் கூறியுள்ளார்.
கேபிசி என்றழைக்கப்படும் க்ரோர்பதி நிகழ்ச்சி சர்வதேச அளவில் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றின் இந்திய வடிவம். அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி தேசிய அளவில் பிரபலமான ஒன்று. இதன் அடுத்த சீஸன் கூடிய விரைவில் தொடங்கவுள்ளது. படப்பிடிப்புக்கு முன் தனது வலை பக்கத்தில் இது குறித்து அமிதாப் பச்சன் பேசியுள்ளார்.
"நிகழ்ச்சியில் கண்டிப்பாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் பேசி சரிபார்த்து வருகிறோம். விளையாட்டின் உணர்வும், அது நடத்தப்படும் விதமும் மிக முக்கியம். அதற்கு அதிக கவனம் தேவைப்படும்.
நிகழ்ச்சிக்கான பதிவு, இதுவரை இல்லாத அளவில் அதிகமாக இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் இந்நிகழ்ச்சிக்கான ஆர்வம் உயிரோட்டத்துடன் இருப்பது இதன்மூலம் தெரிந்தது.
ஆரம்பித்து 17 வருடங்கள் ஆகிவிட்டன. நடுவில் ஒரு சில இடைவெளிகளுடன் இருந்தாலும், நேற்று தான் ஆரம்பித்தது போல இருக்கிறது. எப்பேர்பட்ட பயணம் இது".
இவ்வாறு தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார். 1.9 கோடி மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்க விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.