பாலிவுட்

ஏ சான்றிதழ் படங்களை குழந்தைகளும் பார்க்கின்றனர்: தயாரிப்பாளருடன் விவாதித்த சென்சார் அதிகாரி

செய்திப்பிரிவு

'ஏ' சான்றிதழ் படங்களை குழந்தைகளும் பார்க்கின்றனர் என சென்சார் அதிகாரிகள் கூறியதாக பாலிவுட் தயாரிப்பாளர் கிரண் ஷ்ராஃப் கூறியுள்ளார்.

நவாசுதின் சித்திக்கி நடிப்பில் 'பாபுமோஷய் பந்தோக்பாஸ்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, 48 இடங்களில் கட் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. இது பற்றி, படத் தயாரிப்பாளர், தணிக்கைத் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தன்னிடம் சில அதிகாரிகள் தவறான முறையில் பேசியதாக தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சர்ச்சையை ஒட்டி புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் கிரண் ஷ்ராஃப் உடன் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களும் பங்கேற்றனர். இதில் அவர் பேசியதாவது:

"தணிக்கைத் துறை அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் உரையாடல் நடந்தது. நாங்கள் பொறுமையிழந்தோம். சில ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என எதிர்பார்த்தோம். 'ஏ' சான்றிதழ் வழங்கியதிலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் ஏன் 'ஏ' சான்றிதழ்க்கு பிறகும் 48 இடங்களில் கட் செய்ய வேண்டும் எனக் கேட்டப்போது, 'ஏனென்றால் குழந்தைகளும் 'ஏ' சான்றிதழ் படங்களை பார்க்கிறார்கள்' என்றனர். அவர்கள் சொன்னதற்கு அர்த்தமே இல்லை. வேடிக்கையான வாதமாக இருந்தது.

மேலும் அங்கிருந்த ஒரு பெண்மணி, ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி ஒரு படத்தை உங்களால் எப்படி தயாரிக்க முடிந்தது எனக் கேட்டார். அதற்கு அங்கிருந்த ஒருவர், 'இவர் சட்டையும், பேண்ட்டும் அணிந்திருக்கும்போது, எப்படி பெண்ணாக இருக்க முடியும்' எனக் கேட்டார். எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்தது நேரடியாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு எங்களால் போக முடியும். அங்கு எங்கள் படத்தை நாங்கள் நினைத்தது போல பார்ப்பார்கள் என நம்புகிறேன்" என்று கூறினார்.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் நடத்திய இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சங்கத்தைச் சேர்ந்த அஷோக் பண்டிட், சுதிர் மிஷ்ரா உள்ளிட்ட சில இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.

சங்கத்தின் தலைவர் பண்டிட் பேசும்போது, "படத்துக்கு தரப்பட்ட வெட்டுகளுக்கு சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. ஒரு பெண்ணிடம் தவறாக பேசிய இரண்டு உறுப்பினர்களுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், ஷ்யாம் பெனகல் கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தி, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு தெளிவு பிறக்க வழி செய்ய வேண்டும்" என்றார்.

'பாபுமோஷய் பந்தோக்பாஸ்' இதுவரை தான் நடித்ததில் துணிச்சலான படம் என நவாசுதின் சித்திக்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT