பாலிவுட்

இந்திப் படங்கள் இப்போதுதான் பெண்களை முற்போக்காக சித்தரிக்கிறது: கரீனா பெருமிதம்

பிடிஐ

பாலிவுட் இயக்குநர்கள், பெண்களை இப்போதுதான் முற்போக்குவாதிகளாக சித்தரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்றும், இது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும் கரீனா கபூர் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனத்துக்கு கரீனா கபூர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது:

"திரையில் பெண்களின் சித்தரிப்பில் ஒரு மாறுதல் இருப்பது இப்போது கண்கூடாகத் தெரிகிறது. இந்தி சினிமாவில் இப்போது கதாபாத்திரங்களை எழுதுவதும் இளம் இயக்குநர்கள். அவர்களால் கடினமாக உழைத்து வெற்றி கண்டுள்ள பெண் ஆளுமைகளை வெற்றிகரமாக திரையில் கொண்டு வர முடிகிறது. இப்போது திரைப்படங்களில் பெண்களைப் பற்றிய முற்போக்கான சித்தரிப்பு காணப்படுகிறது. "

நவீன இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பலதரப்பட்ட பொறுப்புகளைக் கையாள்வதாகவும், தானும் ஒரு நவீன இந்தியப் பெண்ணாக உணர்வதாகவும் கரீனா கூறியுள்ளார்.

"பன்முகத்தன்மை கொண்டவர்களாக நவீன இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள். தங்கள் ஆசைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மணமான, சுதந்திரமான, வேலை செய்யும் பெண்ணாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கர்வத்துடனும், பெருமிதத்துடனும் இதைச் சொல்கிறேன். கல்யாணமானாலும் நான் வேலை செய்கிறேன். எனக்கென ஒரு அடையாளத்தையும் பெற்றுள்ளேன்" என்றார்.

SCROLL FOR NEXT