இந்தியா சினிமாவுக்கு தான் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றவில்லை என பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பங்கெடுத்துள்ள கரண் ஜோஹர் பேசும்போது, "நான் பிரபலமான படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் சினிமாவின் அற்புதத்துக்கு என எதுவும் பங்காற்றவில்லை என நினைக்கிறேன். 'லகான்', 'ரங் தே பசந்தி', 'முன்னாபாய்' மாதிரியான படங்களை நான் எடுக்கவில்லை. இந்தப் படங்கள் இந்தி சினிமாவின் மைல்கற்கள்.
நாம் புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். நட்சத்திரங்களை சார்ந்திருப்பது குறைந்து கதைக் கருவுக்கான முக்கியத்துவம் அதிகமாகவேண்டும்.
நான் 19 வருடங்களாக துறையில் இருக்கிறேன். ஆனால் நான் இன்னும் நிறைய படங்களை இயக்கியிருக்க வேண்டும். காலப்போக்கில் நம்மைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொள்ள ஆரம்பிப்போம். நாம் தவறு செய்யவே முடியாது என நினைப்போம். ஆனால் அதெல்லாம் முக்கியமல்ல. சினிமா நம் எல்லோரையும் விட பெரியது.
கடந்த வருடம், என் படங்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை குறைக்க வேண்டும் என எனக்குள் உறுதி எடுத்தேன். ஆனால் அடுத்து என்ன எடுப்பது என இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் தோல்வி வருமோ என்ற பயம் தான். என்னைப் பற்றிய மிகையான மதிப்பீடும் அவ்வப்போது தலை தூக்குகிறது. அந்த சிந்தனையுடன்தான் நான் போராட வேண்டும்.
நான் அடிக்கடி சின்னத்திரையில் தலை காட்டுவதால் எனக்குரிய பாராட்டு சரியாக கிடைப்பதில்லை. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன், நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஆடுகிறேன், இதெல்லாம் என் குடும்பத்துக்கும் தர்மசங்கடம் தான். அதனால் ராஜ்குமார் ஹிரானி, இம்தியாஸ் அலி, ஸோயா அக்தர், அனுராக் ஆகியோரை தீவிரமான இயக்குநர்களாக ஒப்புக்கொள்பவர்கள் என்னை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இதுவரை நான் எடுக்காத அந்த ஒரு படத்தை எதிர்காலத்தில் எடுப்பேன் என்றால், என்னைப் பற்றிய அபிப்ராயத்தை மிஞ்சும் அளவுக்கு அந்தப் படம் இருக்கும் என்றால் மற்றவர்கள் இப்போது என்னைப் பற்றி வைத்திருக்கும் எண்ணத்தில் எனக்கு பிரச்சினை இல்லை" என்றார்.
ஆமிர்கானை சினிமாவின் அதி புத்திசாலியான மூளை எனக் கூறிய ஜோஹர், அவருடன் இணைந்து பணியாற்ற ஆசை தான் என்றும், ஆனால் இன்னும் அப்படியான சூழல் அமையவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில், "அவருக்கு மோசமான படத்தை தந்த ஒரு இயக்குநராக நான் அறியப்பட விரும்பவில்லை. எனவே எனக்கு அதில் பயம் அதிகம்" என்றும் கரண் ஜோஹார் கூறியுள்ளார்.
கரண் ஜோஹரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதில் அமிதாப் பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகியோர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.