பாலிவுட்

அடுத்த முறை ஏமாற்றாமல் இருக்க முயற்சிக்கிறேன்: ஜக்கா ஜாஸூஸ் இயக்குநர்

செய்திப்பிரிவு

அடுத்த முறை ஏமாற்றாமல் இருக்க முயற்சிக்கிறேன் என்று 'ஜக்கா ஜாஸூஸ்' இயக்குநர் அனுராக் பாஷு தெரிவித்துள்ளார்.

அனுராக் பாஷு இயக்கத்தில் ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜக்கா ஜாஸூஸ்'. சித்தார்த் ராய் கபூர், ரன்பீர் கபூர் மற்றும் அனுராக் பாஷு இணைந்து தயாரித்திருந்த இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது.

விமர்சன ரீதியாக சிலர் பாராட்டினாலும், மக்களிடையே இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. மேலும், பெரும் பொருட்செலவில் உருவானதால் படக்குழு மிகவும் சோகமானது. ரன்பீர் கபூரின் தந்தையான ரிஷி கபூர், இயக்குநர் அனுராக் பாஷுவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அனுராக் பாஷு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''மன்னிக்கவும். நான் ஊடகங்களிலிருந்து விலகி இருந்தேன். உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. எனக்கு அது தற்போது ஆக்ஸிஜனைப் போல. படம் பிடிக்காதவர்களுக்கும் நன்றி. உங்கள் நிராகரிப்பு எனது அடுத்த முயற்சிக்கு வழிவகுக்கும். அடுத்த முறை உங்களை ஏமாற்றாமல் இருக்க முயற்சிக்கிறேன். சத்தியம்'' என்று அனுராக் பாஷு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT