நடிகைகள் பிரியங்கா சோப்ராவும், மாதுரி தீக்ஷித்தும் இணைந்து ஒரு நகைச்சுவைத் தொடரை, ஏபிசி தொலைக்காட்சிக்காக தயாரிக்கவுள்ளனர். இருவரும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக செயல்படவுள்ளனர்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் முகவரி தேடித் தந்த தொலைக்காட்சித் தொடர் 'குவாண்டிகோ'. இதில் கிடைத்த பெயரால் அவருக்கு ஹாலிவுட் திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. குவாண்டிகோவை தயாரித்த ஏபிசி நெட்வொர்க் தற்போது பிரியங்கா சோப்ரா - மாதுரி தீக்ஷித் இணையின் தொடரையும் தயாரிக்கிறது.
ஒரே ஒரு கேமராவுடன் படமாக்கப்படவுள்ள இந்தத் தொடர், அமெரிக்காவின் புறநகர் பகுதிக்கு, தனது இரு கலாச்சாரக் குடும்பத்துடன் குடிபெயரும் ஒரு பாலிவுட் நட்சத்திரத்தைப் பற்றியது. அந்த மந்தமான சூழலில் எப்படி வண்ணமயமான வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறார் என்பதே இதன் கதைச் சுருக்கம். இந்தத் தொடர் மாதுரி தீக்ஷித்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையொட்டி எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் மாதிரி பகுதிக்கான திரைக்கதையை, துறையில் அனுபவமிக்க ஸ்ரீ ராவ் எனபவர் எழுதுகிறார். மாதுரியின் கணவரும் நிர்வாக அணியில் பங்கெடுக்கவுள்ளார். எம்ஜிசி நிறுவனத்துடன் இணைந்து ஏபிசி இந்தத் தொடரை தயாரிக்கிறது.
தொடர்ந்து குவாண்டிகோவின் 3-வது சீஸனிலும் பிரியங்கா தயாராகி வருகிறார்.