தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கூடுதல் 30 சதவித கேளிக்கை வரி தமிழ் சினிமாத் துறையை பாதிக்கும் என பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டியைத் தாண்டி கூடுதலாக தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரிக்கு திரைத்துறையை சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் பாலிவுட் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரும் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.
"தமிழக அரசின் இந்த இரட்டை வரி விதிப்பு முயற்சி ஒரே தேசம், ஒரே வரி என்ற ஜிஎஸ்டியின் குறிக்கோளையே தோற்கடிப்பதோடு துறைக்கும் கட்டுப்படியாகாது. தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டு பலரது வேலை போகும்" என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கூடுதல் கேளிக்கை வரிக்கு எதிராக தமிழக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சங்கத்தின் சார்பாக, தமிழக முதல்வருக்கும், மற்ற மாநில முதல்வர்களுக்கும் சித்தார்த் ராய் கபூர் உள்ளூர் கேளிக்கை வரி விதிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.