சல்மான்கானின் புதிய படமான 'ட்யூப்லைட்'டில் ஷாருக்கான் கவுரவ வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கபீர் கான் இயக்கத்தில் 1962 இந்திய-சீனப் போரை அடிப்படையாக கொண்டு தயாராகிவரும் திரைப்படம் 'ட்யூப்லைட்'. சல்மான்கான் நாயகனாகவும், சீன நடிகை ஸூ ஸூ, சத்ருகன் சின்ஹா, மறைந்த நடிகர் ஓம் புரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இதில் ஒரு கவுரவ வேடத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை படத்தின் இணை தயாரிப்பாளரும், சல்மான்கான் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான அமர் புடாலா உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அமர் புடாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் ஒரே படப்பிடிப்பில் இருக்கும்போது அது மாயாஜாலம் போன்றது. 'ட்யூப்லைட்' படத்தை இன்னும் விசேஷமானதாக ஆக்கியதற்கு ஷாருக்கானுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
சல்மானும், ஷாருக்கும் 'கரண் அர்ஜுன்', 'குச் குச் ஹோதா ஹை', 'ஹம் துமாரே ஹெய்ன் சனம்', 'ஹர் தில் ஜோ பியார் கரேன்கா' உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
'ட்யூப்லைட்' திரைப்படம் ஜூலை 26 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.