மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு மாத காலத்தில் மீண்டும் பரோல் அளிக்கப்பட்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்ச்சைக்குரிய பரோல் அனுமதி குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் தத்துக்கு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. 14ம் தேதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும் 15 நாள்களுக்கு பரோலை நீட்டித்தார். இதையடுத்து ஒரு மாத காலத்துக்குப் பின் கடந்த அக்டோபர் 30ம் தேதி சஞ்சய் தத் சிறைக்குத் திரும்பினார்.
இந்நிலையில் சஞ்சய் தத் தனது மனைவி மான்யாதாவின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி அண்மையில் மீண்டும் பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு சிறை அதிகாரிகள் அளித்த பரிந்துரையின் பேரில் புனே டிவிஷனல் கமிஷனர் நேற்று முன்தினம் அனுமதி அளித்தார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த அனுமதியை கண்டித்து, இந்திய குடியரசு கட்சி சார்பில் எரவாடா சிறை முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சஞ்சய் தத்துக்கு சிறப்பு சலுகை காட்டப்படுவதாகவும், அவரது பரோல் அனுமதியை ரத்துசெய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று காலை வெளியான நாளிதழ்களில், திரைப்பட விழா மற்றும் பிறந்த நாள் விழாவில் மான்யதா பங்கேற்றதாக புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சஞ்சய் தத்துக்கு எந்த அடிப்படையில் பரோல் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கும்படி மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் நேற்று உத்தரவிட்டார். “இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சஞ்சய் தத்துக்கு டிவிஷனல் கமிஷனர் பரோல் வழங்கியுள்ளார். இந்த அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளோம்” என்றார்.
இந்நிலையில் மான்யதாவுக்கு கல்லீரலில் கட்டி மற்றும் இதயக் கோளாறு இருப்பதாக மும்பை குளோபல் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் அஜய் சவுகுலே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், “மான்யதாவுக்கு கல்லீரலில் கட்டி உள்ளது. அவருக்கு நெஞ்சு வலியும் ஏற்படுகிறது. கடந்த 15 – 20 நாள்களில் அவர் 10 கிலோ எடை இழந்துள்ளார்.
நாங்கள் பல்வேறு பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன் முடிவுகள் வந்த பிறகு, அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து முடிவு செய்வோம்” என்றார்.- பி.டி.ஐ.