சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'ராம் லீலா' படம் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிக்க, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் படம் 'ராம் லீலா'. நீண்ட நாட்கள் கழித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவருவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
புகைப்படங்கள், டீஸர்கள், டிரெய்லர், பாடல்கள் என அனைத்துமே, மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததால் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியது.
பல்வேறு கட்ட தடங்கல்களுக்கு பிறகு, இன்று உலகமெங்கும் 'ராம் லீலா' திரைக்கு வந்தது. விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருப்பதாக விமர்சனங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.
ரோமியோ - ஜுலியட் கதையை கொஞ்சம் மாற்றியமைத்து 'ராம் லீலா' என்ற படமாக இயக்கியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. இப்படம் தீபிகா படுகோனின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஹே திவானி ஹை ஜவானி, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 100 கோடி மேல் வசூல் செய்திருக்கிறது. அதிலும் சென்னை எக்ஸ்பிரஸ் படம் 200 கோடி மேல் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'ராம் லீலா' படமும் வரவேற்பை பெற்றிருப்பதால், பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் தீபிகா. 2014ன் தொடக்கத்தில், ரஜினியுடன் இவர் நடித்திருக்கும் 'கோச்சடையான்' திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராம் லீலா 100 கோடி வசூலை எத்தனை நாட்களில் கடக்கும் என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.