பாலிவுட்

சல்மான் கானின் ஒப்பீடு உணர்வற்றது: ஆமிர் கான் கருத்து

பிடிஐ

தன் வலியை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்ட சல்மான் கானின் கருத்து உணர்வற்றது என்றும், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் சல்லுபாய் என்று அழைக்கப்படும் சல்மான் கான் விரைவில் திரைக்கு வரவுள்ள தனது 'சுல்தான்' திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.

அதில், சவாலான சண்டைக் காட்சிகளில் நடித்தது தொடர்பாக கூறும்போது, "அந்த சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப் போல் நான் நடந்து சென்றேன்" எனக் கூறினார்.

சல்மானின் இந்தக் கருத்துக்கு பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சல்மான் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக, அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் சல்மானின் கருத்து குறித்து பலிவுட்டின் மற்றுமொரு நட்சத்திரமான ஆமிர் கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆமிர் கான், "சல்மான் அக்கருத்தை தெரிவித்தபோது நான் அங்கு இல்லை. எனினும் சல்மானின் கருத்து துரதிர்ஷ்டவசமானது, உணர்வற்றது" என்றார்.

மேலும், இதுதொடர்பாக சல்மானுக்கு என்ன அறிவுரை வழங்குகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சல்மானுக்கு அறிவுரை வழங்க நான் யார்?" வினவினார்.

SCROLL FOR NEXT