பாலிவுட்

சமகால வன்முறையைக் களமாக்கிய இயக்குநர்

ஷங்கர்

பாலிவுட்டில் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞனுக்குத் திரைப்பட வாழ்க்கை தொடர்ந்து தோல்விகளையே தந்தது. ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாகி, மனைவியும் பிரிந்துபோக இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவுசெய்த நிலையில், அவன் போன இடம் பாலிவுட்டின் மூத்த இயக்குனரான மகேஷ் பட்டின் அலுவலகம். மகேஷ் பட்டுக்கு அவனை முன்பின் அறிமுகம் கிடையாது. மகேஷ் பட்டிடம் தனது விரக்தியனைத்தையும் மளமளவென்று கொட்டிய அந்த இளைஞன், அவரிடம் விடைபெற்றுக் கீழிறங்கி வாயில் கதவை நோக்கிப் போக இருந்தான். மகேஷ் பட்டை ஏதோ ஒன்று உறுத்தியது. வேகமாகக் கீழே இறங்கிப் போய் அந்த இளைஞனைப் பிடித்து, அவன் கையில் பத்தாயிரம் ரூபாயைத் தந்து, இதை வைத்துக்கொள் என்றார்.

முகம் தெரியாத அந்த இளைஞனின் படைப்பாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரம் அது. தொடர்ந்து முயற்சி செய், வெற்றி கிடைக்கும், மனதைத் தளரவிடாதே என்று ஆறுதல் கூறினார். அந்த இளைஞன் அன்று பெற்ற நம்பிக்கையின் பலன்கள்தான் இந்தி சினிமாவில் மிகப்பெரிய சலனங்களையும், திசை மாற்றத்தையும் ஏற்படுத்திய தேவ் டி, கேங்ஸ் ஆப் வாசேபூர் போன்ற படங்கள். ராம்கோபால் வர்மாவின் சத்யா இவருடைய திரைக்கதைதான்.

இந்திய வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கும் வன்முறை, வன்முறை மூலமான அதிகாரம், அதிகாரத்தின் நிழல் முகமாக இருக்கும் குற்றவுலக நடைமுறைகளை யதார்த்தத்திற்கு அருகே முகத்தில் அறைவதுபோல பதிவுசெய்தவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவரது அடுத்த பரிமாணம்தான் அனுராக் காஷ்யப்.

காவியக் காதல் கதையான தேவதாஸ் - பார்வதி கதையைச் சமகால நவீன காதல் கதையாக, இன்றைய இளைஞர்களின் வரம்பு மீறல்கள், கேளிக்கைகளுடன் சொன்னது தேவ் டி.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைமுறைகளாகத் தொடரும் இரு குடும்பங்களின் யுத்தத்தை, ஒரு மகாபாரதம் போல இரண்டு பாகங்களாக ஐந்தரை மணிநேரத்தில் இவர் உருவாக்கியதுதான் கேங்ஸ் ஆப் வசேபூர். மார்லன் பிராண்டோ நடித்த காட்ஃபாதர் திரைப்படத்தை இந்திய இயக்குநர்கள் சீன்சீனாக உருவித் தங்கள் படங்களில் பரிமாறியிருக்கிறார்கள். ஆனால் ஆங்கில காட்ஃபாதருக்கான இந்திய பதில்போல காங்ஸ் ஆப் வாசேபூர், ஒரு வட இந்தியச் சிறு நகரத்தில் நிகழும் கதையை இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து சமகாலம் வரை விஸ்தாரமாகவும் பார்வையாளரைக் களைப்படைய வைக்காமலும் சொன்னது. நேரு காலத்திய டெண்டர் ராஜ்யத்திலிருந்து, இயற்கை வளங்களைச் சுரண்டும் கார்ப்பரேட் யுகம் வரை முதலாளிகளின் முகங்கள் மாறியிருக்கிறதே தவிர, குணம் மாறவில்லை என்பதை வன்மையுடன் சொன்ன படம் இது.

தனது கதையை நகர்த்துவதற்கும், நிகழ்வுகளின் தீவிரத்தைப் பரிகசித்து அபத்தமாக்குவதற்கும் உள்ளூர் இசைக்கோவைகளை அழகாகப் பயன்படுத்தியவர் அனுராக் காஷ்யப். கேங்ஸ் ஆப் வசேபூரில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டு. தேவ் டியிலும் மறக்க முடியாத பாடல்கள் உண்டு.

இவர் எடுத்த நோ ஸ்மோக்கிங், குலால் திரைப்படங்களும் முக்கியமானவை. ஒவ்வொரு படத்தையும் புது வகைமையில் எடுக்க நினைக்கும் அனுராக் காஷ்யப், தற்போது எடுத்துவரும் படம் தோகா. குழந்தைகளிடம் புகழ்பெற்ற இந்திய காமிக் நாயகன் தோகாவை வைத்து இவர் எடுக்கும் அனிமேஷன் திரைப்படம் இது. இந்திய காமிக் நாயகனான தோகாவுக்காக இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

தமிழின் முக்கிய இயக்குனர்களான பாலா, அமீர் மற்றும் சசிக்குமாரின் படங்கள் கொடுத்த தாக்கமே கேங்ஸ் ஆப் வசேப்பூரை எடுக்கத் தூண்டியது என்று கூறுகிறார் அனுராக் காஸ்யப். இயக்குனர் பாலா எடுத்த பரதேசி திரைப்படத்தை கொண்டாடி வட மாநிலங்களில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு, மாறிவரும் தமிழ் சினிமா மீதான தனது அன்பையும் வெளிப்படுத்தியவர் இவர்.

SCROLL FOR NEXT