தற்போது தமிழகத்தின் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருவதாக, திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா நையாண்டி செய்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது நடப்பு அரசியல் சார்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார். சில நேரங்களில் அவரது ட்வீட்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் உண்டு.
இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அவர் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தற்போது தமிழகத்தின் தலைநகரமாக பெங்களூர் திகழ்வதையும், தமிழகத்தின் தலைமைச் செயலகமாக பரப்பன அக்ரஹாரம் விளங்குவதையும் நான் மிகவும் நேசிக்கிறேன். 'இந்தியா ஒன்றே' என்பதற்கு இதுவே உச்சபட்ச சான்று" என்று ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.