தனது கருத்தால் 'ராம்போ' இந்திய ரீமேக் சர்ச்சையானதைத் தொடர்ந்து, சில்வஸ்டர் ஸ்டேலோன் விளக்கமளித்துள்ளார்.
ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஆங்கிலத் திரைப்படம் 'ராம்போ'. சில்வஸ்டர் ஸ்டேலோன் நாயகனாக நடித்துள்ள இப்படம் இதுவரை 4 பாகங்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் முதன்முறையாக 'ராம்போ' திரைப்படம் இந்தியாவில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 2018ம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் நாயகனாக டைகர் ஷெராஃப் நடிக்கவுள்ளார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் இப்படத்தினை கேப்பிடல் வென்சர்ஸ், ஒரிஜினல் எண்டர்டெயின்மெண்ட், சித்தார்த் ஆனந்த் பிக்சர்ஸ் மற்றும் இம்பேக்ட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள். 'ராம்போ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிட்டார்கள். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த ரீமேக் குறித்து சில்வஸ்டர் ஸ்டேலோன் "இந்தியாவில் ராம்போ படத்தை எடுக்கிறார்கள் என்று அண்மையில் ஒரு செய்தி வாசித்தேன். அவர்கள் அதை சிதைக்காமல் இருப்பார்கள் என நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். இக்கருத்தால் பெரும் சர்ச்சை உண்டானது.
சர்ச்சையானதைத் தொடர்ந்து சில்வஸ்டர் ஸ்டேலோன், "சிலர் வாத்தைகளுக்கு இடையில் புகுந்து அவற்றிற்கு புதிய அர்த்தம் கற்பிக்க விரும்புவர். அவர்களை விடுங்கள். டைகர், உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுறேன். எதிர்ப்பை எதிர்த்துப் போராடுங்கள். சாதனையை நோக்கி முன்னேறுங்கள். 'ராம்போ' படம் எனது கட்டுப்பாட்டில் இல்லை. மில்லெனியம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
எக்ஸ்பாண்டபில்ஸ் படத்தையும் அவர்களே வைத்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இளம் நடிகர், நடிகைகள் பெரிய வெற்றியை அடைவதற்கான வாய்ப்பைப் பெறும்போதெல்லாம் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அந்த வகையில் நீங்கள் உங்களது மனதையும் ஆன்மாவையும் ஒருங்கிணௌத்து முழு திறமையையும் இந்தப் படத்துக்காக அளிப்பீர்கள் என நான் நம்புகிறேன். எப்போதும் விடா முயற்சியுடன் செயல்படுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.