பாலிவுட்

அமிதாப் - ஆமிர் கான் இணையும் மெகா திரைப்பபடம்

ஐஏஎன்எஸ்

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், ஆமிர்கான் இணைந்து நடிக்கும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' (“Thugs of Hindostan”) திரைப்படம் 2018-ஆம் வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப், ஆமிர்கான் என மிகப்பெரிய இரண்டு நட்சத்திரங்கள் நடிப்பில், 2 வருடங்கள் கழித்து வெளியாகவிருக்கும் படத்தின் தேதியை இப்போதே அறிவித்திருப்பது பாலிவுட்டில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தத் திரைப்படத்துக்காக முதல் முறையாக அமிதாப்பும், ஆமிர்கானும் திரையில் இணைகின்றனர். தூம் 3 திரைப்படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ண ஆச்சாரியா இந்த படத்தை இயக்குகிறார். இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஆமிர்கான், "ஒரு வழியாக நான் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. எனது ஆதர்சம் திரு.பச்சனுடன் பணியாற்றவுள்ளேன். ஆதித்யா சோப்ராவுக்கு நன்றி. இது தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தானுக்கு வெற்றி.

எனது வாழ்க்கை முழுவதும் நான் மெச்சி வந்த ஒரு நடிகருடன் இணைவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். படப்பிடிப்பு அடுத்த வருட ஆரம்பத்தில் துவங்குகிறது. படத்தின் வெளியீடு 2018 தீபாவளி என முடிவு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பை எப்போது ஆரம்பிப்போம் என காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மற்ற படக்குழு விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

SCROLL FOR NEXT