அதிக வசூல் செய்த இந்தி படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த 'பி.கே'வை தாண்டி 'தங்கல்' சாதனை படைத்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது 'தங்கல்'. தற்போது அதிக வசூல் செய்த இந்தி படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது 'தங்கல்'.
இப்பட்டியலில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான 'பி.கே' முதலிடத்தில் இருந்து வந்தது. இச்சாதனையை 17 நாட்களில் ரூ.340 கோடி வசூலைத் தாண்டி 'தங்கல்' முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது 'தங்கல்', 'பி.கே', 'பாஜிரங்கி பைஜான்', 'சுல்தான்' மற்றும் 'தூம் 3' ஆகிய படங்கள் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இப்படம் ரூ.400 கோடி வசூல் செய்த முதல் இந்தி படம் என்ற சாதனையை படைக்கும் என்று கணித்துள்ளனர். பண மதிப்பு நீக்கம், புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஆகியவற்றை கடந்து இச்சாதனையை 'தங்கல்' நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.