ஃபோர்ப்ஸ் நிறுவனம் 2016-ம் ஆண்டுக்கான உலகத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர்கள் ஷாரூக் கான், அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில், அமெரிக்க பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட், 170 மில்லியன் டாலர்களோடு (சுமார் 1,141 கோடி) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில், 33 மில்லியன் டாலர்களோடு (சுமார் ரூ.221.5 கோடி) ஷாரூக்கான் 86 வது இடத்தில் இருக்கிறார். அக்ஷய் குமார் 31.5 மில்லியன் டாலர்களோடு (சுமார் ரூ.211.4 கோடி) 94-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஷாரூக்கானின் இந்த பயணம் குறித்து ஃபோர்ப்ஸ், ''ரசிகர்களின் நடிகரான ஷாரூக் பாலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸை தன் கையில் வைத்திருக்கிறார். முதன்மைப் பாத்திரங்களில் நடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்துவருகிறார். இதன்மூலம் ஏராளமான பணத்தை சம்பாதித்து வருகிறார்.
பெரும்பாலான அமெரிக்கர்கள் அறிந்தே இருக்காத விளம்பரப் படங்களில் நடிப்பதன் மூலம் புகழையும் பணத்தையும் ஈட்டி வருகிறார்" என்று கூறியுள்ளது.
94-ம் இடத்தில் அக்ஷய்
கடந்த ஆண்டு 76-ம் இடத்தில் இருந்த அக்ஷய் குமார், இந்த ஆண்டு சரிந்து 94-வது இடத்தில் இருக்கிறார். இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஃபோர்ப்ஸ், ''பாலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவர் அக்ஷய். அவர் மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளது.
அதிக சம்பளம் பெறும் பிரபலங்கள் பட்டியலில், அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பேட்டர்சன் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரியல் மேட்ரிட் அணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காம் இடத்தையும், கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 11 வது இடத்தையும், இசையமைப்பாளர் மடோனா 12- வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகிலேயே அதிக சம்பளம் பெறும் 100 பிரபலங்களும் 2015-2016 ஆண்டில் 5.1 பில்லியன் டாலர்களை முன்வரிப்பணமாக செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.