பாலிவுட்

ஏ சான்றிதழ் பெற்றது உட்தா பஞ்சாப்- தணிக்கை குழு வெட்டு 89-ல் இருந்து 13 ஆக குறைப்பு

பிடிஐ

அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்த 'உட்தா பஞ்சாப்' திரைப்படத்துக்கு 13 இடங்களில் 'வெட்டு'டன் தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பதை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை தணிக்கை செய்த தணிக்கைக் குழுவினர், ஆபாசமாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் இருப்பதாகக் கூறி, 89 இடங்களில் கத்தரி போட பரிந்துரைத்தனர். மேலும், படத்தின் தலைப்பில் இருந்து பஞ்சாப் என்ற பெயரையும் நீக்குமாறு உத்தரவிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான பான்தம் பிலிம்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உத்தரவு நாடு முழுவதும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தத் திரைப்படத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தணிக்கை வாரிய உறுப்பினர்கள் 9 பேரும் பார்த்தனர். முடிவில் ஒருமனதாக படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கினர். படத்தில் 13 இடங்களில் கத்தரி போடப்பட்டுள்ளது. இத்தகவலை தணிக்கை வாரியத் தலைவர் பஹ்லஜ் நிஹாலனி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "உட்தா பஞ்சாப் படத்துக்கு 13 வெட்டுகளுடன் 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்துக்கோ அல்லது தீர்ப்பாயத்துக்கோ செல்வது அவர்கள் முடிவுக்குட்பட்டது. தணிக்கை வாரியப் பணி இத்துடன் முடிந்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த பஹ்லஜ் நிஹாலனி, "என்னை இழிவுபடுத்துபவர்கள் கீழானவர்கள்" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT