இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தின் தலைப்பில் இருந்து 'ராம் லீலா' பெயரை நீக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது.
'கோலியான் கி ரஸ்லீலா ராம்-லீலா' என்ற இந்தத் திரைப்படத்தின் தலைப்பில் 'ராம் லீலா'வை நீக்க உத்தரவிடுமாறு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக வழக்குரைஞர்கள் ஆனந்த் சாவ்லா மற்றும் அமித் குமார் சாஹு ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், திரைப்படத் தலைப்பில் உள்ள ராம் லீலா என்ற வார்த்தை ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதால் அதை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக இருந்த நிலையில், உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கே.கே. லஹோடி மற்றும் நீதிபதி சுபாஷ் ககோடே ஆகியோர் அடங்கிய அமர்வு, 'ராம் லீலா' பெயரை நீக்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவன தலைமை செயல் அதிகாரி கிஷோர் லுல்லா, திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டிற்கு டெல்லி நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.