பிரபல நடிகர் வினோத் கண்ணா மறைவைத் தொடர்ந்து, இந்தியில் நடைபெறவிருந்த 'பாகுபலி 2' பிரத்யேக காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை(ஏப்ரல் 28) வெளியாகவுள்ளது.
இப்படத்தை இந்தியாவில் அனைத்து தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் விளம்பரப்படுத்தியது படக்குழு. மேலும், இந்தியில் 'பாகுபலி 2' படத்தின் பிரத்யேக காட்சி இன்று(ஏப்ரல் 27) திரையிடல் இருந்தது. இதில் பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வதாக இருந்தது.
பிரபல நடிகர் வினோத் கண்ணா இன்று காலமானார். அவருடைய மறைவைத் தொடர்ந்து 'பாகுபலி 2' படத்தின் இந்தி உரிமையைக் கைப்பற்றியிருக்கும் கரண் ஜோஹர் பிரத்யேக காட்சியை ரத்து செய்துள்ளார்.
இது குறித்து கரண் ஜோஹர் விடுத்துள்ள அறிக்கையில், "அன்புக்குரிய வினோத் கண்ணா அவர்களின் மறைவு எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மறைவு எங்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியே. அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகுபலி 2ஆம் பாகத்தின் பிரத்யேக காட்சிக்கான விழா (இன்று) ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.