பாலிவுட்

தனுஷின் 2வது இந்திப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஸ்கிரீனன்

'ராஞ்சனா' படத்திற்காக சிறந்த புதுமுக பிலிம் ஃபேர் விருது வாங்கிய தனுஷ், தனது அடுத்த இந்தி படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ராஞ்சனா' படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் தனுஷ். அப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதினை தட்டிச் சென்றார்.

அடுத்ததாக தொடர்ச்சியாக பல்வேறு இந்திப்பட வாய்ப்புகள் வந்தாலும், எதிலும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.

முன்னணி இயக்குநர் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 'சீனி கம்', 'பா' ஆகிய படங்களைத் தொடர்ந்து பால்கியின் இப்படத்திற்கும் இளையராஜா இசையமைக்க இருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஏபிசிஎல் நிறுவனத்தின் மூலம் அபிஷேக் பச்சன் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் தனுஷ் கலந்து கொள்கிறார். இது குறித்து, "இன்று முதல் எனது இரண்டாவது இந்திப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்" என்று ட்வீட்டியுள்ளார் தனுஷ்.

தனுஷ் குறித்து இயக்குநர் பால்கி " விளையாட்டுத்தனமான ஸ்கூல் பையனோ, வெறி பிடிச்ச கேங்ஸ்டரோ... எந்தக் கேரக்டருக்கும் செட் ஆவார். அது தனுஷோட ப்ளஸ். படத்தில் மூணு ஹீரோ. ஒண்ணு அமிதாப். இன்னொண்ணு தனுஷ். மூணாவது ஹீரோ அக்‌ஷரா." என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 2014ல் இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT