பாலிவுட்

அக்‌ஷய் குமாருக்கு தேசிய விருது கொடுத்தால் மட்டும் ஏன் கேள்வி வருகிறது?- இயக்குநர் ப்ரியதர்ஷன்

பிடிஐ

அக்‌ஷய்குமார் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றது குறித்து பலரும் கேள்வியெழுப்புவது ஏன் எனப் புரியவில்லை என்று இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான இயக்குநர் ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.

இந்த வருடத்துக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் 'ருஸ்தம்' படத்தில் நடித்ததற்காக நடிகர் அக்‌ஷய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 'தங்கல்' படத்தில் ஆமிர்கான் நடிப்புக்காக விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்‌ஷய் குமாரின் பெயர் அறிவிக்கப்பட்டதால், இதில் அதிருப்தியடைந்த ஒரு தரப்பு தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பை விமர்சித்து வருகிறது.

மேலும், 'ஹீரா ஃபேரி', 'கரம் மசாலா', 'பகம் பாக்', 'பூல் புலைய்யா', 'கட்டா மீட்டா' உள்ளிட்ட ப்ரியதர்ஷனின் பல படங்களில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கிறார். எனவே தனிப்பட்ட முறையில் இருந்த நட்பு விருதாக பிரதிபலித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள இயக்குநர் ப்ரியதர்ஷன், "நான் அந்த விமர்சனங்களுக்கு எளிமையாக பதில் சொல்கிறேன். ரமேஷ் சிப்பி நடுவர் குழு தலைவராக இருந்தபோது அமிதாப் பச்சன் விருது பெற்றார், பிரகாஷ் ஜா இருந்த போது அஜய் தேவ்கன் விருது பெற்றார். அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை. இன்று மட்டும் ஏன் இவ்வளவு கேள்விகள்?

அக்‌ஷய் குமாரின் நடிப்பு இரண்டு படங்களில் நன்றாக இருந்ததன் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏர்லிஃப்ட்' மற்றும் 'ருஸ்தம்'. இது நடுவர் குழுவின் முடிவே. இரண்டும் வெவ்வேறு பரிமாணங்களில் இருந்தது. விதிமுறைகளின் படி ஒரு படத்தின் பெயரை மட்டுமே குறிப்பிடமுடியும் என்பதால் 'ருஸ்தம்' குறிப்பிடப்பட்டது. ஆனால் விருது இரண்டு படங்களுக்காகவும் சேர்த்துதான்" என ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.

மாநில மொழிப் படங்கள் பல, இம்முறை வெற்றி பெற்றது குறித்து பேசிய ப்ரியதர்ஷன், "படங்களைப் பார்க்கும்போது ஒன்று தெரிந்தது. பல பாலிவுட் படங்கள் தன் பாலின உறவை கதையின் மையமாகக் கொண்டிருந்தன. ஆனால் அவை பெரிய சமூக பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவில்லை. அவை வித்தியாசமான கதைகளை சொல்ல முயற்சிக்கின்றன. 'தங்கல்' படமும் சமூகப் பிரச்சினைகளை பேசவில்லை. அது ஒருவரின் வாழ்க்கைக் கதை.

மாநில மொழிப் படங்கள் 100 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்படுவதில்லை. அவை மனப்பூர்வமாக எடுக்கப்படுகின்றன. நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களை நாம் முன்னிறுத்தவேண்டும். மாநில மொழிப் படங்கள் சமூக பிரச்சினைகளை அற்புதமாக கதைகளின் மூலம் சொல்கின்றன" என்றார்.

SCROLL FOR NEXT